
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் கூட்டணியே வெற்றி கூட்டணி. அதுவே ஆட்சி அமைக்கும் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். பனைத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் . கள் விற்பனையை வெளிப்படையாக அங்கீகரித்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால்தான் திமுக அரசு தடை விதிக்கிறது. திருபுவனம் அஜித் குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேராசிரியை நிகிதாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அஜித்குமாரை விசாரிக்க காவலர்களுக்கு ஆணையிட்டது யார்? என்பது குறித்த தகவல்கள் வெளிட வேண்டும் . இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயல். சிபிஐ விசாரணை மட்டுமே உடனடி தீர்வாகாது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை உடனடியாகத் தடுக்க வேண்டும்
எங்களுக்கு எந்த கட்சி நல்ல அங்கீகாரம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க வாய்ப்பு அதிகம். பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியையும் அழிக்க நினைக்கவில்லை . தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களே ஆகிறது. யாருடனும் கூட்டணி இல்லை என்பது விஜய்யின் முடிவு. அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை என்றார்.
திமுகவின் "ஓரணியில் தமிழகம்" என்ற புதிய திட்டம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கனிமொழி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "ஓரணியில் மதுவா?" என ஜான் பாண்டியன் கிண்டலாகத் திருப்பிக் கேட்டார். தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் நான், போட்டியிட்டபோது திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். பின்னர், வாக்களிக்கவில்லை என்று கூறி, பணத்தை திரும்ப கேட்டு மிரட்டினர்.
இவ்வாறு அவர் கூறினார்.