திருநெல்வேலி: விபத்துகளில் பலி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 19% குறைவு: மாவட்ட காவல்துறைக்கு சபாஷ்

tirunelveli-accident-deaths-down-19-in-6-months

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 19 சதவீதம் குறைந்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்ட காவல்துறை, சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் சாலை பாதுகாப்புக் கூட்டங்களில், விபத்து நடக்கும் மற்றும் நடக்க வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் சாலை பாதுகாப்பு கட்டமைப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், விபத்துகளால் ஏற்படும் மரணம் வெகுவாக குறைந்துள்ளது.

விபத்து அபாயப் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் பட்டைகள், வேகத்தடைகள், உயர் மின்விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சாலை அடையாளக் குறிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுவரை 512 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதிவேகமாக, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை விபத்துகளில்ர 143 மரணங்கள் நிகழ்ந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 116 விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நடப்பாண்டில், 19 சதவிகிதம் விபத்து மரணங்கள் குறைந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விபத்து இல்லாத சமூகத்தை நோக்கி உறுதியாகப் பயணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.