
திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலின் 519-வது ஆனித் தேரோட்டம் வரும் ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் சுமார் 1,000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தேரோட்ட பாதுகாப்புப் பணிகளுக்காக, 3 ட்ரோன் கேமராக்கள் மற்றும் CCTV வாகனங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கோவில் உட்புறமும் வெளிப்புறமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களைத் தடுக்க 10 குற்றப்பிரிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிகள், எச்சரிக்கை பலகைகள், மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நான்கு ரத வீதிகளிலும் இரண்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் 16 காவல் உதவி மையங்கள் (May I Help You) அமைக்கப்பட்டு, காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களையும், பிற அவசர விவரங்களையும் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர உதவிக்கு 100, 0462-2562651 மற்றும் 9498101726 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் குழு, மற்றும் நடமாடும் கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, பக்தர்கள் சாதி ரீதியிலான பனியன்கள், கயிறுகள், கொடிகள் போன்றவற்றை பயன்படுத்தவோ, சாதித் தலைவர்கள் குறித்து கோஷங்கள் எழுப்பவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேரோட்டத்தின்போது அதிக ஒலி எழுப்பும் விசில்களை விற்கவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . வாகனங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேரோட்டத்தையொட்டி பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து மானூர் மார்க்கம், ஆலங்குளம் மார்க்கம், தென்காசி மார்க்கம், அம்பை, பாபநாசம் செல்லும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவசரகால வாகனங்களான தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் குறிப்பிட்ட அவசர வழித்தடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.