விழாக்கோலம் பூண்டது நெல்லை மாநகரம்... நாளை ஆனித் தேரோட்டம்

nellai-city-is-in-festivel-mood-tomorrow-aani-therottam

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த சிவாலயமான நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலின் ஆனிப் பெருந்திருவிழா களைகட்டி வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை கோலாகலமாக நடைபெறுகிறது.

நெல்லையப்பர் கோயிலில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த சில நாட்களாகவே சுவாமி, அம்பாள் மற்றும் இதர தேர்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, அலங்காரத்துடன் தேரோட்டத்திற்குத் தயார் நிலையில் உள்ளன. புதிதாக வட கயிறுகள் பொருத்தப்பட்டு தேர்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. தேரோட்டத்திற்காக நான்கு ரத வீதிகளிலும் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டு, பல்வேறு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போதுமான சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நாளை அதிகாலை 3 மணியளவில் சுவாமி மற்றும் அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 8.30 மணியளவில் தேரோட்டம் தொடங்குகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுக்கின்றனர்.

பத்தாம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை), திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. ஆனிப் பெருந்திருவிழாவின் தேரோட்டத்தைக் காண நெல்லை நகரமே ஆவலுடன் காத்திருக்கிறது.