நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ராதாபுரம் வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் விவசாயிகளின் உரிமைக்காக போராடி வீர மரணம் அடைந்த 59 உழவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நெல்லை மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராஜபவன் வரவேற்று பேசினார்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் உரிமை மின்சார திட்டத்தை ரத்து செய்ய முடியாத அளவில் தனியாக சட்டம் இயற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் . 20 ஆண்டுகளுக்கு மேலாக வேளாண் உரிமை மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் 4 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கிட வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிதி உதவியை ரூ 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.20, 000 ஆண்டுதோறும் உற்பத்தி மாநியமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் டாக்டர். முருகேசன், பேராசிரியர் பழனி, நெல்லை மாறன், ஐயப்பன், ஜவகர் பால் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க விவசாயி அந்தோணி பிரபாசிங் நன்றி கூறினார்.










