கேட்டில் தலை வைத்து அழுத சோகம் பாளையங்கோட்டை டி.என்.பி.சி தேர்வு மையத்தில் பரிதாப சம்பவம்

woman-crying-at-the-palayamkottai-tnpsc-examination-center

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு முன்பாக கட்டாயம் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், காலை 9:05 மணிக்கு வந்த சில தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு மையத்தின் கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்ட நிலையில், தேர்வர்கள் கதவு வழியாக அதிகாரிகளை அழைத்துப் பார்த்தும் எந்தப் பலனும் இல்லை. இதனால், இளம் பெண் ஒருவர் மிகுந்த ஏமாற்றத்துடனும் அடைக்கப்பட்ட கேட் மீது தலை வைத்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. டி.என்.பி.சி சட்டதிட்டங்களின்படி, தாமதமாக வரும் தேர்வர்களுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால், பல மாதங்களாக கடினமாக உழைத்து தேர்வு எழுத வந்த தேர்வர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

தேர்வு எழுத செல்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?

அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தேர்வர்களும், தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற முக்கியமான தேர்வுகளுக்குச் செல்லும்போது, தேர்வு நடைபெறும் மையத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்றுவிட வேண்டும். எதிர்பாராத போக்குவரத்து நெரிசல், வாகனக் கோளாறுகள் அல்லது வேறு ஏதேனும் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால்,பயணத்தை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். தேர்வு மையம் எங்கே உள்ளது என்று முன்னதாக ஒரு முறை சென்று பார்த்து வருவதும் நல்லது. குறிப்பாக, முதல்முறையாகச் செல்லும் மையமாக இருந்தால் இது மிகவும் அவசியம்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும், நேரம் தொடர்பான விதிகளை, கவனமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்துக்கு ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சென்றால் கூட அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கடின உழைப்பும், எதிர்காலமும் பாதிக்கப்படக்கூடும். தேர்வாணையங்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவதால், எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தேர்வர்கள் புரிந்துகொண்டு, உரிய திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்.