பாளையங்கோட்டை பாண்டியர் கால கோட்டை... பரமாரிக்க மாநகராட்சி சார்பில் ஊழியர்

nellai-meyor-inspect-palayamkottai-pandya-era-fort

பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பாண்டியர் கால கோட்டையை பராமரிக்க மாநகராட்சி சார்பில் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மேயர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மேடை போலீஸ் ஸ்டேஷன், வரலாற்று சிறப்புமிக்க கட்டடம். பாண்டியர் காலத்தில் கோட்டையாக இருந்தது. பின்னர் பாளையக்காரர்களாலும், ஆங்கிலேயர்களாலும் பயன்படுத்தினர் . சுமார் 30 அடி உயரமுள்ள கோட்டைச் சுவரின் மீதான கொத்தளம் அமைக்கப்பட்டதால் "மேடை" என்ற பெயரைப் பெற்றது. 1891 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் காவல் நிலையம், மாவட்ட குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுடன், கைதிகளை அடைத்து வைக்கும் சிறையும் இருந்தது.இ

காலப்போக்கில் இந்த கட்டடம் சிதிலமடைந்தது. தொடர்ந்து, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 3.6 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது. புல்வெளி தரை, மின் விளக்குகள், இருக்கைகள், கோட்டையின் வரலாற்றை விளக்கும் ஓவியங்கள், தகவல்களும் இடம் பெற்றன. தற்போது , மேடை காவல் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.

எனினும், புனரமைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னம் சமீபகாலமாக முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இந்தக் கோட்டைப் பகுதியை நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக உரிய முறையில் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்தக் கோட்டைப் பகுதியின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தனியாக ஒரு பணியாளரை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :