அம்பாசமுத்திரம் அருகே தெருவில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களை கண்டித்தவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு உட்பட்டது முடப்பாலம். இந்த பகுதியில் நேற்றிரவு சில இளைஞர்கள் நண்பரின் பிறந்த நாளை தெருவில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், இரவு நேரத்தில் பொது இடத்தில் ஏன் பட்டாசு வெடித்து தூங்குபவர்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால், அந்த இளைஞர்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் , கோபமடைந்த ரவிச்சந்திரன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக , அங்கு சென்ற போலீசார் இளைஞர்களை கண்டித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் , நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அளவில் ரவிச்சந்திரன் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர். இதில் , ரவிச்சந்திரன் வீட்டின் முன் பகுதி சிறிது சேதமடைந்தது. இது குறித்தும் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 இளைஞர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.










