மீண்டும் சாதிய வன்முறை: 12ஆம் வகுப்பு மாணவர் மீது தாக்குதல்?தகிக்கும் நெல்லை

caste-violence-again-attack-on-12th-grade-student-in-nellai

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புது கிராமத்தில் ஜூலை 13ம் தேதி இரவு நிகழ்ந்த சாதிய வன்முறையைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் சீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது 17 வயது மகன் அஜய் உட்பட ஐந்து பேர் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்களால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முன்னீர்பள்ளம் காவல்துறை மறுத்து விட்டனர். மாறாக எனது மகன் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்

பட்டியலினத்தைச் (தேவேந்திர குல வேளாளர்) சேர்ந்தவர்கள் நாங்கள். ஆனால், தாக்குதலில் ஈடுபட்ட சாதிய வன்முறையாளர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். இதனால், எனது 12ஆம் வகுப்பு படிக்கும் மகனின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. சாதிய வன்முறையாளர்கள் மற்றும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் 'என்று கூறியுள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக மாவட்ட ஆட்சியர் சுகுமார் சுற்றுப்பயணத்தில் இருந்தார். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் புகாரளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது, அலுவலகத்தில் கலெக்டர் இல்லை. கலெக்டரை சந்திக்க வேண்டுமென்று போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் தடுத்தனர். இதனால், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. தொடர்ந்து, திருநெல்வேலி துணை ஆணையர் வினோத் சாந்தாராம் மற்றும் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையில் 50 போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.

READ MORE ABOUT :