மானூர், நரியூத்து பரும்பு பகுதியில் கரகாட்டக் கலைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
திருநெல்வேலி அருகேயுள்ள , நரியூத்து பரும்பு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் குளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருவேல மரத்தடியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டன.ர இறந்தவரின் காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வெளியேறி உறைந்த நிலையில் இருந்தது. தொடர்ந்து, உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்தவர் நெல்லை பழைய பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் வெற்றிவேல் (வயது 19) என்பது தெரியவந்தது. இவரது தாயார் மாரியம்மாள். வெற்றிவேலுக்கு 4 சகோதரிகள் உள்ளன. வெற்றிவேல் கரகாட்டக் கலைஞர். இவரின் தந்தை 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட , தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வந்தார். தாயார் மாரியம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர். இதனால் , குடும்பப் பொறுப்பு முழுவதையும் வெற்றிவேலே சுமந்து வந்துள்ளார்.
கழிவுநீர் அகற்றும் வாகனத்திலும் வெற்றிவேல் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வெற்றிவேல் மது குடித்துள்ளார். மிதமிஞ்சிய போதையில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது , மற்ற இருவரும் சேர்ந்து வெற்றிவேலை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த வெற்றிவேலை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, வெற்றிவேல் பலியாகி விட்டார். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மரணமடைந்த வெற்றிவேலின் தாயார் மாரியம்மாள் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வந்து மனு அளித்தார். தனது மகன் வெற்றிவேல் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த 26-வது கொலை இது.











