சிறுமியை கர்ப்பமாக்கிய உடன்குடியைச் சேர்ந்த நபருக்கு சாகும் வரை சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட முகமது புகாரி என்பவரின் மகன் ஜகுபர் உசேன் (55). இவர் தற்போது பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகரம் பகுதியில் வசித்து வருகிறார். 17 வயது சிறுமியை இவர், பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.விளைவாக சிறுமி கர்ப்பமாகி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ,ஜகுபர் உசேனை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் அரசு வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது குழந்தை மற்றும் குற்றவாளி ஆகியோருக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனையில் சிறுமி கர்ப்பாமாக காரணம் ஜகுபர் உசேன் என்பது உறுதியாக தெரிய வந்தது .
வழக்கில் மொத்தம் 17 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 35 வாய்தாக்களுக்குப் பிறகு இன்று நீதிபதி சுரேஷ்குமார் , ஜகுபர் உசேனுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்தார். மேலும், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.










