12ம் வகுப்பு மாணவனிடம் தகராறு... குண்டர் சட்ட ரவுடியை கூட தட்டி கேட்க நெல்லை காவல்துறைக்கு தைரியம் இல்லையா?

rowdy-attacks-12th-grade-student-in-tiruchelveli

நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், ஏராளமான பொதுமக்கள் எஸ்பி சிலம்பரசனிடம் புகார் மனுக்களை அளித்தனர். அப்போது பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி முத்துராமலிங்கபுரம் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் அளித்த புகார் மனுவில் கூறியதாவது:

என்னுடைய 16 வயது மகன் பாலகுருநாதன் என்பவர் பாளையங்கோட்டை ஜான்ஸ் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறான். எங்கள் ஊரில் வசிக்கும் முத்தையாதேவர் என்பவரின் மகன் அழகுமுத்து (40) மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அழகுமுத்து மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தகாராறில் ஈடுபடுவார். கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி மாலை எனது மகனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். நாங்கள் அன்றைய தினம் இரவு 8 மணியளவில் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த அழகுமுத்துவும் அவரது நண்பர்களும் மது போதையில் வந்து, கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அழகுமுத்துவின் மிரட்டல் அதிகாரித்துள்ளது. இதனால், எனது மகனுடனும் உறவினர்களுடனும் பளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கும் வீட்டுக்கும் மாறி மாறி அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, அழகுமுத்து மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி சிலம்பரசன் இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தற்போது இவர்களது புகார் மனு திருநெல்வேலி ரூரல் டி.எஸ்.பி ரகுபதிராஜாவிடம் நிலுவையில் உள்ளது. எனது மகனை தாக்கி 23 நாட்கள் ஆகி விட்டது ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காத இந்த காவல்துறையிடம் நீதி, நேர்மை இல்லையா? என சிறுவனின் பெற்றோர் கேட்கின்றனர்.

அழகுமுத்து குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும் சொல்கிறார்கள். கடந்த 6 மாதங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் 26 கொலைகள் நடந்துள்ளது. போலீசில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி கூட சிவில் வழக்கில் கொலை செய்யப்பட்டார். இதனால், காவல்துறை அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.