பாப்பாக்குடி பகுதியில், கஞ்சா மற்றும் மது போதையில் உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்ற வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த வாலிபர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாஜிஸ்திரேட் நேரில் சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், தனது 17 வயது நண்பருடன் இணைந்து கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் தகராறு செய்துள்ளார். இது குறித்து பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பாப்பாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இருவரும் தங்கள் கைகளில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு உதவி ஆய்வாளர் முருகனை ஓட ஓட விரட்டியுள்ளனர். தனது உயிருக்கு அஞ்சிய உதவி ஆய்வாளர், அங்குள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் சென்று பதுங்கியுள்ளார்.
இருப்பினும், அந்த இருவரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை விடாமல் பின்தொடர்ந்து, கழிவறையின் கதவுகளையும், வீட்டின் கதவுகளையும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு உடைத்துள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் தற்காப்பு நடவடிக்கையாக, உதவி ஆய்வாளர் முருகன் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சண்முகசுந்தரத்தின் வயிற்றுப் பகுதியில் சுட்டார். இதில் சண்முகசுந்தரம் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த சண்முகசுந்தரம் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் முருகனும் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ஆலங்குளம் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் ஜெயந்தி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சண்முகசுந்தரத்தை நேரில் சந்தித்து, சம்பவம் தொடர்பாக வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். சம்பவம் நடைபெற்ற போது சண்முகசுந்தரம் மது போதையில் இருந்தாரா ? என்பது தொடர்பான கேள்விகளையும் மாஜிஸ்திரேட் எழுப்பினார். சண்முகசுந்தரம் அளித்த அனைத்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. அதோடு, சண்முகசுந்தரம் 18 வயதை பூர்த்தியடைந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், சண்முகசுந்தரத்தை ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீதிமன்றகாவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் ஜெயந்தி உதவி ஆய்வாளர் முருகனையும் சந்தித்து அவரிடமும் வாக்குமூலத்தைப் பெறவுள்ளார்.









