ஆடி மாதத்தின் 18-ஆம் நாளான இன்று, நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் பெண்கள் கூடி, இயற்கையையும் நதியையும் வணங்கி, புனித நீராடி, புதிய தாலி பெருக்கி கட்டி வழிபாடு செய்தனர்.
ஆடிப்பெருக்கு விழா, தமிழகத்தில் மழைக்காலத்தின் தொடக்கத்தையும், நதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை எதிர்நோக்குவதற்காக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். இந்த நாளில், திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்ப நலத்திற்காகவும் ஆற்றங்கரைகளில் வழிபடுவது வழக்கம் இதனையொட்டி நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் அம்மன் உருவம் செய்து அதனை வழிபட்டு தாலி பெருக்கி கட்டி, பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அரிசி, 18 வகை உணவு வகைகள், மலர்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை ஆற்றிற்கு படையலாக வழங்கினர். தொடர்ந்து 18 வகை உணவு பிரசாதமாகவும் வழங்கப்பட்டது.
இதபோன்று கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், சேரன்மகாதேவி உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புனித தலங்களில் பெண்கள் கூடி, மங்கள நாண் மாற்றி, விளக்கேற்றி, ஆரத்தி செய்து புனித நீராடினர். இந்த விழாவில், புதுமணப் பெண்கள் தாலி மாற்றும் நிகழ்வும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், அருகிலுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்த பெண்கள் பங்கேற்றனர்.
ஆடிப்பெருக்கு விழா, இயற்கை வழிபாட்டுடன் கூடியி தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது










