கவின் கொலை வழக்கு விசாரணை... தன்னை அறியாமல் கதறிய சுபாஷினி

kvain-murder-cbcid-police-statrs-investigation

கவின் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இக்கொலையில் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படும் சுர்ஜித்தின் கூட்டாளிகள் மற்றும் பின்னணியில் உள்ளோர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று, சுபாஷினியிடம்அவரது உறவினர் வீட்டில் வைத்து சிபிசிஐடி போலீசார் நேரடி விசாரணை நடத்தினர். விசாரணையின்போது சுபாஷினி கதறி அழுதுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கவின் கொலைக்கு சுர்ஜித் முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. கவினை நெல்லைக்கு வரவழைத்தது யார்? என்பது குறித்தும், கவினை கொலை செய்யும் நோக்கத்துடனேயே சுர்ஜித் செயல்பட்டதும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் சுர்ஜித்துடன் சேர்ந்து கூடுதலாக ஒருவரும் செயல்பட்டுள்ளார். கொலை நடந்தவுடன், சுர்ஜித் ரத்தக்கறை படிந்த உடைகளுடன் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்துதான் சுர்ஜித்தின் தந்தையான சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவின் மரணம் குறித்து அறிந்ததும், எஸ்.ஐ. சரவணன் உடனடியாக சுபாஷினி பணிபுரிந்த மருத்துவமனைக்கு வந்து விசாரித்துள்ளார். அப்போது, நடந்த வாக்குவாதத்தில், சுபாஷினியை அவரது தந்தை எஸ்.ஐ. சரவணன் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. கொலை நடந்தவுடன் ரத்தக்கறை படிந்த உடைகளடன் சுர்ஜித்தை அழைத்துச் சென்றது யார் ?அல்லது அவர் தனியாகச் சென்றாரா? இக்கொலையின் பின்னணியில் வேறு யார் இருக்கிறார்கள் என்பது குறித்து சிபிசிஐடி மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறது.

சுபாஷினியின் வேண்டுகோளை ஏற்று, அவர் தற்போது தங்கியிருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கே சென்று சிபிசிஐடி தீவிர விசாரணையை மேற்கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வழக்கு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், 60 நாட்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிபிசிஐடி உள்ளது. இதனால், கவின் கொலையின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.