தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் பிரம்மாண்ட விருந்து: அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நேற்று (ஆகஸ்ட் 3) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு, 109 வகை சைவ உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரது இல்லம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த விருந்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், ஹெச். ராஜா, மத்திய அமைச்சர் எல். முருகன், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை .
விருந்தினர்களுக்கு உணவு பரிமாற, பெங்களூருவிலிருந்து பிரத்யேகமாக தட்டுகள், டம்ளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. விருந்துக்காக குளிரூட்டப்பட்ட மற்றும் திறந்தவெளி உணவுக்கூடங்கள் என இரண்டு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விருந்தின் சிறப்பம்சமாக, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னமும், பாஜகவின் தாமரைச் சின்னமும் பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விருந்தில் 108 வகையான சைவ உணவுகள் மற்றும் 15 வகையான உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது. ஸ்பானிஷ், சைனீஸ் வகைகளை உள்ளடக்கிய 4 வகையான சூப், தாய் மற்றும் இந்திய வகைகளை சேர்ந்த இரு வகையான சாலட், இட்டாலியன், கொரியன், சைனீஸ், தென்னிந்திய வகைகளை உள்ளடக்கிய 9 வகையான ஸ்டார்டர்கள், 3 வகையான பார்பிக்யூ, 5 வகையான வடமாநில சாட்கள், 3 வகையான திருநெல்வேலி அல்வா , 11 வகையான இனிப்பு, 3 வகையான போலிமேலும் பூண்டு குழம்பு, சிவப்பு சம்பா இடியாப்பம், நெல்லை சொதி, கேரள புட்டு, குஜராத் டோக்ளா, 4 வகையான பஞ்சாபி பாரம்பரிய ரொட்டி, பாரம்பரிய சிறுதானிய உணவுகள், 8 வகையான சாதங்கள்,14 வகையான தோசைகள், 6 வகையான அப்பளங்கள், பில்டர் காபி, நன்னாரி பால், பழ துண்டுகள், 17 வகையான ஐஸ்கிரீம்கள், 7 வகையான ஆரஞ்சு, தர்பூசணி ஜூஸ்கள் என மொத்தம் 109 உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
விருந்தின் முதல் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை, சுதாகர் ரெட்டி, எஸ்.பி. வேலுமணி, பொன், ராதாகிருஷ்ணன், இணைஅமைச்சர் முருகன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். விருந்தில் எடப்பாடி அனைத்து உணவுகளையும் ருசித்து சாப்பிட்டார். விருந்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் தனி அறையில் 30 நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.அப்போது, தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதித்தாக தெரிகிறது.










