நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலில் தாமிரபரணி ஆறு கலைக்கிறது . இது, வற்றாத ஜீவநெதியாகும்
ஆடிப்பெருக்கு விழாவின் முக்கிய நிகழ்வாக, பெண்கள் தாமிரபரணி ஆற்றிற்கு சீர்வரிசை வழங்குதல் மற்றும் ஆரத்தி பூஜை செய்தல் போன்றவை நடைபெற்றது . ஆடி மாதம் 18-ஆம் தேதியான நேற்று மாலையில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சிருங்கேரி சாரதா மண்டபத்தில் இருந்து சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தை அடைந்தது. அங்கு, சீர்வரிசைப் பொருட்கள் அன்னை தாமிரபரணிக்கு படைக்கப்பட்டு, ஆராதனையுடன் விழா நடைபெற்றது.
ஆடி மாதம் தட்சிணாயன காலம் என்பதால், இந்நேரம் தேவர்களுக்கு மாலை நேரமாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் அம்மன் கோவில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் 18-ஆம் நாளை ஆடிப் பெருக்கு என கொண்டாடி, ஆறுகளைப் பெண் தெய்வமாக, கர்ப்பிணிப் பெண்ணாகப் பாவித்து மக்கள் வழிபடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக அம்மன் கோவில்களில் வளைகாப்பு உற்சவங்களும் நடைபெறுவதுண்டு.
இந்த ஐதீகத்தின்படி, ஆடிப் பெருக்கு தினத்தில் தாமிரபரணி அன்னையை ஒரு கர்ப்பிணிப் பெண்ணாகக் கருதி, கருப்பு வளையல், கருகுமணி, மஞ்சள், தேங்காய், பழம் போன்ற மங்களப் பொருட்களைக் கொண்டு சீர் செய்வதன் மூலம் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிக்கும், கணவன்-மனைவி ஒற்றுமை பெருகும், ஆயுள் விருத்தி உண்டாகும் மற்றும் அகால மரணங்கள் ஏற்படாது என நம்பப்படுகிறது. மேலும், விவசாயம் செழிக்கும் என்றும் கூறப்படுகிறது. கல்வி, செல்வம், பூமி ஆகியவற்றைத் தெய்வமாக வழிபடுவது போல, தாமிரபரணி நதித்தாயை வழிபட்டால் சகல பாவங்களும் விலகும். மற்ற நதிகளில் நீராடினால் மட்டுமே பாவங்கள் நீங்கும். ஆனால், தாமிரபரணியின் குளிர்ந்த காற்று பட்டாலே பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். உலக நதிகளில் தாமிரபரணிக்கு மட்டுமே நட்சத்திர அந்தஸ்து (விசாகம்) உள்ளது.
இந்த நிகழ்வில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்.









.jpg)
