விஜயநாராயணம் : கவரிங் செயினுக்காக வைரமுத்து செய்த காரியம்: பெண் டி.எஸ்.பி செய்த சம்பவம்

vijayanarayanam-man-theft-covering-chain-from-elder-woman

நாங்குநேரி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டியை அரிவாளால் தாக்கி கழுத்திலிருந்த கவரிங் செயினை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் 3 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர்.

நாங்குநேரி அருகே விஜயநாராயணம் அடுத்த தெற்கு கழுவூரைச் சேர்ந்த தங்கப்பெருமாள் என்பவரின் மனைவி சித்திரைகனி (70). சித்திரைக்கனி நேற்று மாலை தங்களுக்குச் சொந்தமான வயலில் வேலையில் ஈடுபட்டு இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் “வாழை இலை இருக்கிறதா?” எனக் கேட்டு வயலுக்குள் நுழைந்தார். பின்னர், திடீரென அந்த நபர், சித்திரைகனியின் தலையில் அரிவாளால் வெட்டி , கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து வேகமாக தப்பியுள்ளார். காயம் பட்டு வலி தங்க முடியாமல் சித்திரை கனியின் அலறல் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாங்குநேரி டிஎஸ்பி தர்ஷிகா தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து, சுற்றுப்புற கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரித்தனர். இதில் தாக்குதல் நடத்தியவர் பதைக்கத்தைச் சேர்ந்த வைரமுத்து (31) என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்தில் போலீசார் வைரமுத்துவை சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வைரமுத்துவிடம் இருந்து பறிக்கப்பட்ட கவரிங் செயின் மற்றும் சம்பவத்தில் பயன்படுத்திய அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாங்குநேரி டிஎஸ்பி தர்ஷிகா தலைமையில் நடந்த இந்த விரைவான கைது நடவடிக்கையை நெல்லை மாவட்ட உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.