50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியை தூக்கி எறியுங்கள், கடன் இல்லாத, வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என் பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், "உரிமை மீட்க, தலைமை காக்க" என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று மாலை நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
*குடிகாரர்களாகும் இளைஞர்கள்*
தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் குடிகாரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இன்று 20 வயது இளைஞனால் கூட மது அருந்தாமல் இருக்க முடியவில்லை என்பதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் வேதனைக்குரிய சாதனை.
டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, இளம் விதவைகளின் எண்ணிக்கையை பெருகி உள்ளனர். விபத்துகள், மன நோய்கள், தற்கொலைகள், கல்லீரல் நோய்கள் என அனைத்து சமூக சீர்கேடுகளுக்கும் இந்த மதுதான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்குத்தான் போடப்படும்.
*கழுத்தை நெரிக்கும் கடன்*
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் எது என்று கேட்டால், அது தமிழ்நாடுதான் என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் சொல்கிறது. பல லட்சம் கோடி கடனை வாங்கி என்ன செய்தீர்கள்? என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள்? இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை சிந்திக்க திறனற்றவர்களாக மாற்றி விட்டீர்கள். தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் பல்லாயிரம் கோடிகளை நீர்ப்பாசன திட்டங்களுக்கு செலவு செய்கின்றன. ஆனால் , இங்குள்ள ஆட்சியாளர்களோ இலவசங்களைக் கொடுத்து மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கடனை யார் அடைப்பார்கள்? உங்கள் தலையில்தான் இந்த கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு கொடுங்கள். கடன் இல்லாத, வளமான தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம்.
*விவசாயிகள் புறக்கணிப்பு*
விவசாயிகளின் உண்மையான பாதுகாவலன் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான். விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதன் முதலில் ஓடி வருவது நாங்களாகத்தான் இருப்போம். ஆனால், திராவிட கட்சிகள் விவசாயத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டன. அதனால்தான் இன்று தக்காளி விலை விண்ணை முட்டுகிறது. சரியான திட்டமிடல் இல்லை, விவசாயிகளுக்கு உரிய விலை இல்லை. எங்கள் ஆட்சியில் விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக மாற்றப்படும். நீர் மேலாண்மைக்கு தனி கவனம் செலுத்தி, ஆறுகளை இணைத்து தமிழகத்தை வறட்சி இல்லாத மாநிலமாக மாற்றுவோம்.
*புதிய அத்தியாயம் பாமக 2.0*
இந்த ஊழல், குடும்ப அரசியல். தமிழகத்திற்கு ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை எங்களால் மட்டுமே கொடுக்க முடியும். அதற்காகவே பாமக 2.0 என்ற புதிய திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். வெற்று வாக்குறுதிகளை நாங்கள் அள்ளி வீசவில்லை, ஒவ்வொரு திட்டத்தையும் எப்படி செயல்படுத்துவோம் என்ற வரைபடத்துடன் தயாராக இருக்கிறோம்.
எனவே, வரும் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 50 ஆண்டு கால இருண்ட ஆட்சிக்கு முடிவு கட்டி, ஒரு புதிய வளமான தமிழகத்தை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.











