நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்து பொன்னாக்குடி கிராமம் உள்ளது. இங்கு, சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் அமைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக இந்த குளத்தை தூர்வாரி மழை நீரை அதிகளவு தேக்கி வைத்தால் பொன்னாக்குடி சுற்றுவட்டார கிராம மக்களின் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் தலைமையில் பொன்னாக்குடி ஒன்றிய கவுன்சிலர் நம்பிராஜன் மற்றும் ஊர் தலைவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சுகுமார், விரைவில் பெரிய குளத்தை ஆய்வு செய்து தூர் வாறுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
பொன்னாக்குடி ஒன்றிய கவுன்சிலர் நம்பிராஜன் கூறுகையில், ' இந்த குளத்து நீரினை பயன்படுத்தி சுமார் 350 நன்செய். புன்செய் நிலங்கள் இருபோக விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இந்த குளம் கருவேல மரங்கள் சூழ்ந்தும், முட்புதர்கள் மண்டியும் உள்ளது. இதனால் பருவ மழை காலங்களில் குளத்திற்குள் சேரும் மழைநீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாக வெளியேறுகிறது.
பெரிய குளத்தை தூர்வாரி முட்புதர்களை அகற்றி, நீர் தேங்கும்படி செய்தால், இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யும் ஆயிரம் குடும்பங்கள் பயனடையும். இரு போக விளைச்சல் சாத்தியமாகும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த குளம் முறைப்படி தூர்வாரி நீர்மட்டம் உயர்ந்தால், இதன் மூலம் பயன்படக்கூடிய 25 கீழ்குளங்கள் முழுமையாக நீர் நிரம்பும். வடகிழக்கு பருவ மழை காலம் தொடங்கும் முன்பே தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால், விவசாயிகள் முழுமையாக பயனடைவார்கள் 'என்று தெரிவித்தார்.











