மனிதர்களின் ஆயுட்காலம் எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? சிலர் 100 வயதை தாண்டி நலமாக வாழ்வதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் புதிய மரபணு ஆய்வில் ஈடுபட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
நெல்லை மனோன்மனியம் சுந்தரானார் பல்கலைக்கழகத்தின் உயிர்தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மாணவி ஆட்ரி பிரிணா பேராசிரியர் சுதாகர் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற Human Genomics என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்ரி பிரிணா குழு, உலகின் பல பகுதிகளில் இருந்து 106 முதல் 117 வயது வரையிலான 21 பேரின் மரபணுத் தொகுப்புகளை ஆராய்ந்தது. இதில் இரண்டு பேர் ஆப்பிரிக்கா கண்டத்தையும், ஸ்பெயின் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இருவர், மற்றும் 16 பேர் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஆய்வின் போது, வேறுபட்ட இனங்களைச் சேர்ந்தவர்களின் மரபணுக்களில் 11,348 மரபணுகள் ஒரே மாதிரியாக காணப்பட்டன. இதுவே ஆய்வின் மிக முக்கியமான முடிவாகும். இனம், புவியியல், வாழ்க்கை முறை என பல வேறுபாடு இருந்தாலும், நீண்ட ஆயுளுக்கான சில மரபணுக் கூறுகள் அனைவரிடமும் பொதுவாக இருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புத் திறன் – உடல் நோய்களை எதிர்த்து போராடும் திறன். ஆற்றல் உற்பத்தி – உடல் செல்களில் ஆற்றல் உருவாகும் செயல்முறை. ஆர்என்ஏ நிலைத்தன்மை – மரபணு தகவல்களை துல்லியமாக பரிமாறும் திறன். வாசனை உணரும் திறன் – மூளையின் நுண்ணறிவு செயல்பாடுகளுடன் தொடர்புடையது. இது போன்ற அரிதான மரபணுக் கூறுகள், நீண்ட ஆயுளுக்கான அடிப்படை காரணிகளாக இருக்கலாம் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின் மூலம், நீண்ட ஆயுளுக்கான மரபணுக் கூறுகள் இன, புவியியல், உணவுப் பழக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் பொதுவாகக் காணப்படுகிது. ஆய்வின் வழிகாட்டியான பேராசிரியர் சுதாகர் கூறுகையில், 'இந்த ஆய்வு மரபணு அறிவியலில் ஒரு முக்கிய மைல் கல். மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் அடிப்படை கூறுகளை நாம் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் இதன் அடிப்படையில் மரபணு சிகிச்சைகள் உருவாகும் வாய்ப்பு அதிகம்" என்கிறார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சந்திரசேகர் கூறியதாவது, “இந்த சாதனை நமது மாணவர்களின் திறமையையும், இந்தியாவின் ஆராய்ச்சி திறனையும் உலகளவில் வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் முக்கியமான இதழில் இந்த ஆய்வு வெளிவந்திருப்பது பெருமைக்குரியது. ஆட்ரி பிரிணா மற்றும் அவரது குழுவின் ஆய்வு, மனிதனின் ஆயுட்காலம் மரபணுக்களிலேயே எழுதப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. இது ஒரு சாதாரண ஆய்வு அல்ல; மனித வாழ்வின் அடிப்படை உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட கூடிய ஒரு அறிவியல் முயற்சி. நீண்ட ஆயுளின் ரகசியம் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்றாலும், இந்த ஆய்வு அதனை முழுமையாக அறிந்து கொள்வதற்கான கதவை திறந்துள்ளது '
இவ்வாறு அவர் தெரிவித்தார்.











