குண்டும் குழியுமான திருநெல்வேலி தியாகராஜநகர் மேம்பாலம்: வாலு போச்சு கத்தி வந்த கதை என வாகன ஓட்டிகள் வேதனை

potholes-in-tirunelveli-thiagarajanagar-flyover

திருநெல்வேலி, தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலம் பல ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற்போது பாலத்தின் பல பகுதிகளில் குண்டும் குழியுத் உருவாகி வாகன ஓட்டிகளை பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது.

திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதிகளான தியாகராஜ நகர், என்.ஜி.ஓ காலனி, அன்பு நகர், ராஜகோபாலபுரம் , பாளையங்கோட்டை மற்றும் நகரின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய வழியாக தியாகராஜ நகர் ரயில்வே கேட் இருந்தது. ஒரு நாளைக்கு 13 முறைக்கும் மேல் இந்த கேட் மூடப்பட்டதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவசரத் தேவைக்கு மருத்துவமனை செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகச் சாலை குண்டும் குழியுமாக, ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடியதாக இருந்தது. இந்த அவல நிலையை அதிகாரிகளுக்கு உணர்த்தும் விதமாக, சமூக ஆர்வலர்கள் சிலர், *"இந்திய ரயில்வேயின் பம்பர் பரிசுப் போட்டி"* என்ற பெயரில் பதாகை வைத்து நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அதில், இந்த ரயில்வே கேட்டைக் கடப்பவர்களுக்கு முதல் பரிசு 'உயிர் இழப்பு', இரண்டாம் பரிசு 'கை, கால் இழப்பு', மூன்றாம் பரிசு 'சிராய்ப்பு' என அறிவித்து, "வீட்டில் சொல்லிவிட்டு வரவும்" போன்ற நிபந்தனைகளையும் காமெடியாக குறிப்பிட்டு அதிகாரிகளின் அலட்சியத்தை சுட்டி காட்டினர்.

தொடர் போராட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து, கிடப்பில் போடப்பட்டிருந்த மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் திறக்கப்பட்டது. இதனால், பல ஆண்டு காலத் துயரம் முடிவுக்கு வந்ததாக மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. தற்போது, ரயில்வே துறையால் கட்டப்பட்ட மேம்பாலத்தின் இணைப்புப் பகுதிகளில் (Expansion Joints) உள்ள இரும்புத் தகடுகள் பெயர்ந்து, சாலை மட்டத்திலிருந்து உயரமாக இருக்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், இந்தத் தகடுகளில் மோதி நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்தப் பாலத்தில் சர்வசாதாரணமாக விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், "ரயில்வே கேட் குழியில் விழுந்து அடிபடுவதை விட, இந்தப் பாலம் பரவாயில்லை என்று நினைத்தோம். ஆனால், இப்போது பாலத்தில் இந்த பிரச்னை வந்துள்ளது. அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, முறையில் இதைச் சரிசெய்ய வேண்டும்," என்றார்.

READ MORE ABOUT :