விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக, தரத்தையும் சுகாதாரத்தையும் மறந்துவிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சிகரமான காணொளி ஒன்று திருநெல்வேலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வெறும் 20 ரூபாய்க்கு ஷவர்மா விற்கப்படுவதால், திறந்தவெளி கழிவுநீர் ஓடையின் மேல் நின்றுகொண்டு மக்கள் முண்டியடித்து வாங்கும் காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*காணொளியில் பதிவான அதிர்ச்சி காட்சி*
மேலப்பாளையம் பகுதியில் உள்ள "பெஸ்ட் டேஸ்டி" என்ற சிறிய உணவகத்தில், ஒரு நாள் சிறப்புச் சலுகையாக ஷவர்மா 20 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கடையின் முன் குவிந்தனர்.
இதில், அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்தக் கடை திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்க்கு மிக அருகில் அமைந்துள்ளது. குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்து, துர்நாற்றம் வீசும் அந்த ஓடையின் மேல், மரப்பலகைகளைப் போட்டு, அதன் மீது வரிசையில் நின்று மக்கள் ஷவர்மா வாங்கிச் செல்கின்றனர். கூட்ட நெரிசலும் காணப்படுகிறது.
சமீபகாலமாக ஷவர்மா போன்ற உணவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதால், உணவு பாதுகாப்புத் துறை கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பார்ப்பாம்.
1. *சரியான வெப்பநிலை:* ஷவர்மா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இறைச்சி, மைனஸ் 18 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். சமைக்கும்போது, இறைச்சியின் அனைத்துப் பகுதிகளும் குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும்.
2. *சுத்தமான சூழல்:* சமையல் செய்யும் இடம், உபகரணங்கள் அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும். ஈக்கள், பூச்சிகள் மற்றும் தூசிகள் அண்டாதவாறு சுகாதாரமான சூழல் பேண வேண்டும்.
3. *பச்சை முட்டைக்குத் தடை:* ஷவர்மாவுடன் வழங்கப்படும் மயோனைஸ் தயாரிப்பில் பச்சை முட்டைகளைப் பயன்படுத்தக் கூடாது. பாஸ்சியரைஸ் செய்யப்பட்ட முட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. *தனிப்பட்ட சுகாதாரம்:* சமையல் செய்பவர்கள் கையுறை, தலைக்கவசம் மற்றும் சுத்தமான மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
5. *காலாவதி:* சமைக்கப்பட்ட இறைச்சியை நான்கு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது.
ஆனால், இந்த காணொளியில் காணப்படும் சூழலை பார்க்கும் போது, இந்த வழிகாட்டுதல்களில் ஒன்றுகூட பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. திறந்தவெளி சாக்கடையில் இருந்து பரவும் கிருமிகள், காற்றில் கலந்து உணவில் படிய அதிக வாய்ப்புள்ளது.

*உடனடி நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் பொறுப்பு*
இந்த விவகாரத்தில், திருநெல்வேலி மாநகராட்சியும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட வேண்டியது அவசியம்.
அதிகாரிகளின் கடமை:* சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, சுகாதாரமற்ற சூழலில் உணவு தயாரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயைச் சரிசெய்து, மக்கள் பாதுகாப்புடன் நடமாட வழிவகை செய்ய வேண்டும்.
*பொதுமக்களின் விழிப்புணர்வு:* விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக, தங்கள் உடல்நலத்தோடு விளையாடுவது மிகவும் ஆபத்தானது. உணவு வாங்கும் முன், அந்த இடம் சுகாதாரமாக உள்ளதா- உணவுப் பொருட்கள் பாதுகாப்பாகத் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. குறிப்பாக, குழந்தைகளை இதுபோன்ற ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
உணவு நஞ்சாக மாறினால் (Food Poisoning)அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். எனவே, மலிவு விலையை விட, தங்களின் உயிர் அதிக விலை மதிப்பு கொண்டது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.











