திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத் தவறிய நிர்வாகத்தைக் கண்டித்து, 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் (Water Purifier) நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பரபரப்பு
திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பவுல்ராஜ், கையில் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரை புகைப்பட ஆதாரத்தையும் ஏந்தியபடி மன்றத்திற்குள் வந்தார்.
யாரும் எதிர்பாராத நிலையில், அவர் நேராக மேயர் மற்றும் துணை மேயர் அமர்ந்திருந்த மேஜையை நோக்கிச் சென்று, “நீங்கள் சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி, அந்தத் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மேஜையின் மீது வைத்தார். கவுன்சிலரின் இந்தச் செயலால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.

*ஒரு வருடமாகத் தீராத பிரச்சினை*
பின்னர் இதுகுறித்து கவுன்சிலர் பவுல்ராஜ் கூறியதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து மாசடைவதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட, ஆற்றுத் தண்ணீரையே ஒரு குடத்தில் எடுத்து வந்து காட்டினேன். அப்போது, ஆறு மாத காலத்திற்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், ஓராண்டு ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து கழிவுநீரைக் கலந்ததற்காக, திருநெல்வேலி மாநகராட்சிக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரூ.1 கோடியே 55 லட்சம் அபராதம் விதிக்கப் பரிந்துரை செய்துள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், அரசுக்கு இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஓராண்டாகியும் மக்களுக்குச் சுத்தமான குடிநீரைக் கொடுக்கத் தவறிய நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கவே, இந்த நூதனப் போராட்டத்தை நடத்தியுள்ளேன். அதிகாரிகளாவது சுத்தமான தண்ணீரைக் குடிக்கட்டும் என்பதற்காகவே இந்தத் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைக் கொண்டு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுன்சிலரின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி கூட்டத்தில் தாமிரபரணி நதி மாசுபாடு மற்றும் அபராத விவகாரம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.











