கவின் ஆணவக்கொலை வழக்கு: எஸ்.ஐ. சரவணன் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி

kavin-murder-case-s-i-saravanan-s-bail-plea-rejected-for-the-second-time

கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனின் ஜாமீன் மனுவை, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.

*வழக்கின் பின்னணி*

கடந்த ஜூலை 27-ம் தேதி, சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனின் மகள் சுபாஷினியுடனான காதல் விவகாரத்தில், கவின் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சரவணன், அவரது மகன் சுர்ஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டன.ர இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பொதுநல வழக்கு விசாரணையின்போது, இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிப்பதாக அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

*ஜாமீன் மனு தள்ளுபடி*

இந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் சரவணன், ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி எஸ். ஹேமா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.ஏற்கெனவே செப்டம்பர் 16-ம் தேதி சரவணனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருந்த நிலையில், மீண்டும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

"இந்த வழக்கில் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை; தடயவியல் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது. மனுதாரரான சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி, தற்போது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள மனுதாரரின் மனைவி, செப்டம்பர் 23-ம் தேதி விசாரிக்கப்பட்ட போதிலும், இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் அவருக்குள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

இத்தகைய சூழலில், மனுதாரருக்கு ஜாமீனில் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைக்கவோ அல்லது விசாரணையில் தலையிடவோ வாய்ப்புள்ளது. எனவே, இந்த நீதிமன்றம் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க விரும்பவில்லை."

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.


*சி.பி.சி.ஐ.டி. தரப்பு வாதம்*

சி.பி.சி.ஐ.டி. தரப்பில், இந்த வழக்கில் இதுவரை 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், 19 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், "சரவணன், தனது மகன் சுர்ஜித்துக்கு போலி பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். கொலைக்குப் பிறகு, ஆதாரங்களை மறைப்பதற்காக, மற்றொரு குற்றவாளியான தனது உறவினர் ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான இடத்தைப் பயன்படுத்த சுர்ஜித்துக்கு அவர் உதவியுள்ளார்" என்றும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.

கவினின் தாயார் தமிழ்செல்வியின் வழக்கறிஞர் பவானி பி. மோகனும், சரவணனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

READ MORE ABOUT :