நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஆசிரியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பிரபல கொள்ளையன் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை வண்ணாரப்பேட்டை, அப்பர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு அருண். இவருடைய மனைவி முத்துச்செல்வி (வயது 33) நெல்லை டவுன் பகுதியிலுள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம், பள்ளி முடிந்து மாலையில் வண்ணாரப்பேட்டை ராமலிங்கம் தெரு வழியாக முத்துசெல்வி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், கண்ணிமைக்கம் நேரத்தில் முத்துச்செல்வியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி விட்டார்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடந்தது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், பழைய குற்றவாளிகளின் பட்டியலை வைத்தும் துப்பு துலக்கினர்.
விசாரணையில், இந்த சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது, மதுரை அலங்காநல்லூர் சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் ரவிச்சந்திரன் (49) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் மதுரைக்கு சென்று சென்று ரவிச்சந்திரனை தேடினர். அப்போது, 2012-ம் ஆண்டு நடந்த வேறு ஒரு குற்ற வழக்கு தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசார் ஏற்கெனவே ரவிச்சந்திரனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார், மதுரை சிறைக்குச் சென்று அங்குள்ள ரவிச்சந்திரனை, ஆசிரியை சங்கிலி பறிப்பு வழக்கில் முறைப்படி (பார்மல் அரஸ்ட்) கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையன் ரவிச்சந்திரன் மீது தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.











