இந்தியாவில் அம்பாசிடர் கார் போலவே என்பீல்டு பைக் மீதும் பலரும் அலாதி காதல் கொண்டிருப்பார்கள். இந்த பைக்கை ஓட்டி செல்வதே பலரும் கௌரவமாக கருதுவார்கள். என்பீல்டு பைக்குகளின் சத்தமும், அதன் கம்பீரமான தோற்றமுமே அதற்கு காரணம். இந்த காலக்கட்டத்தில் என்பீல்டு பைக்குகள் எத்தனையோ நவீன மாடல்களில் வந்து விட்டாலும், இப்போதும் நெல்லையை சேர்ந்த ஒருவர் அரை நுற்றாண்டு காலம் கடந்த ஒரு என்பீல்டு பைக்கை இன்னும் ஓட்டி வருகிறார் என்பதுதான் ஆச்சரியமாக விஷயமாக உள்ளது.

திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தற்போது, 48 வயதான இவர், துபாயில் டூரிஸ்ட் பேருந்து ஓட்டுநராக பல ஆண்டு காலம் பணியாற்றியவர். கடந்த 2013ம் ஆண்டு இந்தியா வந்த போது, தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்த உதகை எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் ஏலத்துக்கு விடப்பட்ட என்பீல்டு பைக் ஒன்றை ஏலத்துக்கு எடுத்துள்ளார். நண்பர்கள் 5 பேரும் 5 என்பீல்டு பைக்குகளை ஏலம் எடுத்துள்ளனர். இன்ஜீன் மற்றும் சேஸ் மட்டுமே ஏலமாக கிடைத்துள்ளது. அப்போதே, 40 ஆயிரம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளனர். இந்த பைக் 1971ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, எம். ஆர் .சியில் பயன்படுத்தப்பட்ட பிறகு , ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இந்த பைக்கை மீண்டும் ஓடக் கூடிய அளவுக்கு அட்டகாசமான புல்லட்டாக வடிவமைத்தது குறித்து சுந்தர்ராஜ் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே பழைய என்பீல்டு பைக்குகள் மீது அலாதி பிரியம். இந்த பைக்கை ஏலம் எடுத்த பிறகு, சென்னை என்பீல்டு பைக் நிறுவனத்தில் வேலை பார்த்த திருச்சி லால்குடியை சேர்ந்த எனது நண்பரிடத்தில் கொடுத்தேன். அவர்தான், இந்த பைக்கை சிங்கம் போல மாற்றி கொடுத்தார். இந்த பைக்குக்கு வண்ணம் கூட துபாயில் இருந்து வாங்கி கொண்டு வந்தேன். அங்கே, அரைலிட்டர் பெயிண்ட் நமது ஊர் பணத்துக்கு 7ஆயிரம் ரூபாய். அந்த பெயிண்ட் காரணமாகவே இப்போதும், அந்த பைக் ஜொலிக்கிறது.

இன்னும், 10 ஆண்டுகளானாலும் கூட, இந்த பைக்கின் வண்ணம் மங்கவே மங்காது. இப்போதும், ஆம்ப் சரி செய்து கிக் செய்துதான் ஸ்டார்ட் செய்கிறேன். ஒரே கிக்கில் பைக் ஸ்டார்ட் ஆகி விடும். கிக் செய்து ஸ்டார்ட் செய்தால்தான், அது புல்லட். அதனால்தான், செல்ஃப் ஸ்டார்ர்ட்டர் எல்லாம் மாட்டவில்லை. அதோடு, வேறு யாருக்கும் எனது பைக்கை ஓட்டவும் கொடுக்க மாட்டேன் . எனது ஆயுளுக்கும் என்னுடன் இந்த பைக் இருக்கும் " என்கிறார்.
சுந்தர்ராஜ் 3ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தமிழ், அராபி என பல மொழிகள் பேசுகிறார். தற்போது, துபாயில் இருந்து திரும்பி நிரந்தரமாக திருநெல்வேலியில் குடியேறி விட்ட சுந்தர்ராஜ் . 'மெரிட்' என்ற பெயரில் டிராவல் ஏஜன்சி நடத்தி வருகிறார்.










