திருநெல்வேலியில் முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு: 5,527 பேர் பங்கேற்பு

postgraduate-teacher-recruitment-exam-in-tirunelveli-5-527-candidates-participated

மிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தில் 18 மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் 70 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 5,527 பட்டதாரிகள் பங்கேற்றள்ளனர்.

முன்னதாக, இந்தத் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற்றதால், தேர்வர்களின் நலன் கருதி, முதுகலை ஆசிரியர் தேர்வு அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்வினை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. சுகுமார் தெரிவித்ததாவது:

"தேர்வுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்காக அனைத்து 18 தேர்வு மையங்களுக்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேர்வு தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு, மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்குக் காலை 9:30 மணிக்குள் கண்டிப்பாக வருகை தர வேண்டும். தாமதமாக, அதாவது காலை 9:30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர காரணிகளைக் கருத்தில் கொண்டு, முன்னதாகவே தங்கள் தேர்வு மையங்களுக்கு வந்தடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்."

தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.