தென்காசியில் இருந்து நெல்லைக்கு வந்த அரசுப் பேருந்தில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பயணிகளிடம் பர்ஸ்களைத் திருடிய தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், கையும் களவுமாக பிடிபட்டனர்.
தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, இரண்டு பெண்கள் பயணிகளிடம் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
திருநெல்வேலி டவுன் தொண்டர் சன்னதி அருகே வந்தபோது, பிக்பாக்கெட்டில் ஈடுபட்ட பெண்களை பயணிகள் பிடித்தனர். பேருந்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தைக் கண்ட ஓட்டுநர், உடனடியாக சாலையோரம் பேருந்தை நிறுத்தினார்.

அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இரண்டு பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். தகவலறிந்து டவுன் காவல் நிலைய போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் நடத்திய சோதனையில், அந்தப் பெண்களிடமிருந்து பயணிகளிடம் திருடப்பட்ட நான்கு பர்ஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
பேருந்தின் ஓட்டுநர் கூறுகையில், "இந்தப் பெண்கள் அடிக்கடி இதே பேருந்தில் பயணம் செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கலாம் .இன்று வசமாக சிக்கிக் கொண்டனர் "என்கின்றனர்.











