பாளையங்கோட்டையில் வாங்க கற்றுக் கொள்வோம் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

fire-prevention-awareness-program-in-palayankottai

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், பொதுமக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறும் வகையில் 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையங்களில் நடைபெற்றது. தீயணைப்புத் துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் பேரில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணை இயக்குநர் சரவண பாபு, மாவட்ட அலுவலர் பானுப்பிரியா மற்றும் உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தீ தடுப்புபாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்கங்களை பார்வையிட்டனர்.

நிகழ்ச்சி குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தீயணைப்பு நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். பொதுமக்களுக்கு அன்றாட வாழ்வில் தேவைப்படும் பாதுகாப்பு முறைகள் குறித்து இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவின் போது செய்ய வேண்டியவை, எலக்ட்ரிக் பைக் தீ விபத்துகளைத் தடுக்கும் முறைகள், தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது மற்றும் சமையலறையில் ஏற்படும் திடீர் தீ விபத்துகளைக் கையாள்வது போன்ற முக்கிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அவசர உதவிக்கு 112 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வடகிழக்கு பருவமழைக்கு தீயணைப்புத் துறை தயார்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தீயணைப்பு நிலையங்களில் சுமார் 200 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் எங்கள் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எந்தவொரு அவசர காலத்தையும் எதிர்கொள்ள தீயணைப்புத் துறை முழு வீச்சில் தயாராக உள்ளது' என்றார்.

READ MORE ABOUT :