தண்ணீர்பிரச்னை: திருநெல்வேலியை அதிர வைத்த பேராசிரியரின் ஃபேஸ்புக் பதிவு

Water-issue-Professor-s-Facebook-post-viral-in-Tirunelveli

நெல்லை தியாகராஜ நகரில் முனைவர். ஹரிஹரன் குடும்பத்துடன் வசிக்கிறார். ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர் தனது வீட்டில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது.

தெரு குழாயில் குடிநீர் பிடிக்கிறேன்!

இரண்டு வரி கட்டும் நுகர்வோரின் அவலநிலை!

எனது வீடு( ஐந்தாம் நடுத்தெரு) தியாகராஜ நகரில் உள்ளது. 10/02/2002 முதல் இங்கு குடியேறினேன் . எங்க வீட்டில் சிமெண்ட் தொட்டி 10× 5 அளவில் நீளச் செவ்வக வடிவில் இருக்கும்.
வீட்டுக்கு வீடு மாலையும் மறுநாள் காலையும் ஆக இரண்டு முறை இரண்டு மணிநேரம் குடிநீர் வரும். ஒரு நாள் விட்டு மறு இரண்டு நாட்கள் தண்ணீர் வரும்.தானாக வந்து விழும்.குடிப்பதற்கு குடங்களில் பிடித்தது போக, டியூபில் போட்டு சிமெண்ட் தொட்டியில் சேகரித்து மூடி போட்டு வைத்திருப்போம். அது ஒரு காலம்.

2006 இல் மாடி எடுத்துக் கட்டினேன். அதற்கு ஒரு குடிநீர் இணைப்பு வாங்கினேன்.அதற்கு ஒரு பாதாளச் சாக்கடை ஆகியவற்றின் முன்வைப்புத் தொகை கட்டினேன். ஓரளவு தண்ணீர் கிடைத்தது.. ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விட்டு வந்தார்கள்.

2010 முதல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இப்போது, குடியிருப்பு எண்ணிக்கை அதிகரித்து விட்டதை, காரணமாக சொல்கிறார்கள். வரி வாங்கும் மாநகராட்சி, அதற்கு ஏற்ப குடிநீர் வசதி செய்து தர வேண்டும் தானே?. இப்போது காரில் குடங்களை எடுத்து சென்று தெரு குழாயில் மற்றும் அன்பு நகர் மற்றும் பெருமாள்புரம் வாட்டர் டேங்க்குக்கு போய் வீட்டு உபயோகத்திற்கு குடிநீர் எடுத்து வருகிறேன்.

ஒன்றுக்கு இரண்டு குடிநீர் இணைப்பு வரிப் பணம் கட்டியுள்ளேன்.எந்த பயனும் இல்லை. கவுன்சிலரிடம், தண்ணீர் திறக்கும் ஊழியரிடம் சொல்லி சொல்லி தொண்டைத் தண்ணீர் வற்றி விட்டது. 23 வருடங்கள் சொந்த வீட்டில் குடியிருந்து வருகிறேன் வேறெங்கும் மாறிப் போக மனமில்லை. முகநூல் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .மனபாரம் குறையலாம் என்று.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :