பேட்டையில் அக்காள்-தம்பியை காரில் கடத்திய நிதி நிறுவன கும்பல்: டீலிங் போட்டு தப்பிய சம்பவம்

sister-and-brother-kidnaps-in-pettai-private-finance-company-owner-arrested

திருநெல்வேலியில் கந்துவட்டி கேட்டு அக்காள் மற்றும் தம்பியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனியார் நிதி நிறுவன உரிமையாளர் உட்பட இரண்டு பேரை பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் பாண்டியன் மகன் வானுமாமலை. இவர் டவுன் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிதி நிறுவனத்தில், டவுன் பழனி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பார்வதி (32) என்பவர் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்காக வாரந்தோறும் 10,000 ரூபாயை வட்டியாக செலுத்தி வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக பார்வதியால் வட்டியை சரிவர செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது. இதனால், வானுமாமலை கந்துவட்டி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுத்தமல்லி விலக்கு ஸ்ரீநிவாஸ் நகர் அருகேயுள்ள பழைய கார்கள் வாங்கி விற்கும் நிறுவனத்திற்கு, தனது தம்பியுடன் பார்வதி கார் வாங்குவதற்காக சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்த, வானுமாமலை மற்றும் ஐந்து பேர் கொண்ட கும்பல், தங்களது காரில் அந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு பார்வதியையும், அவரது தம்பியையும் மிரட்டி, வலுக்கட்டாயமாக தங்களது காரில் கடத்திச் சென்று, நாங்குநேரி அருகே உள்ள ஒரு தோட்டத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் சிறைவைத்த கும்பல், யாரிடமாவது பேசி பணத்தை கொண்டு வரச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

இதனால் பீதியடைந்த பார்வதியின் தம்பி, தனது உறவினரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வீட்டுச் சாவி மற்றும் சொத்துப் பத்திரத்தை நிதி நிறுவனத்திற்கு கொண்டு தருவதாக உறுதியளித்துள்ளார். இநத டீலிங்கை ஏற்றுக்கொண்ட வானுமாமலை தரப்பினர், மீண்டும் பார்வதியையும் அவரது தம்பியையும் காரில் ஏற்றிக்கொண்டு வந்து நெல்லை சந்திப்பில் இறக்கிவிட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவம் குறித்து பார்வதி பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பேட்டை காவல் ஆய்வாளர் விமலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில், நிதி நிறுவன உரிமையாளர் வானுமாமலை மற்றும் அவரது கார் ஓட்டுநரான, பேட்டை 2-வது தெருவைச் சேர்ந்த செல்வின் என்ற அப்துல் ரகுமான் (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வானுமாமலை மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :