சோலார் பேனல் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு : ஆளுநருக்கு ஆதார், ரேசன் அட்டைகளை அனுப்பி கல்லத்திகுளம் மக்கள் போராட்டம்

kallathikulam-people-protest-against-solar-panel-firm

கல்லத்திகுளத்தில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக லட்சக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து ஆளுநருக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை அனுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் மாறாந்த்தை அருகேயுள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் முறையான அனுமதி பெறாமல், சுமார் 14 தனியார் நிறுவனங்கள் நிலங்களை வாங்கி, மா, நெல்லி, சப்போட்டா போன்ற பழ மரங்களை வெட்டி சாய்த்துள்ளன. மரங்கள் வெட்டப்பட்டதால் மான்கள் ,மயில்கள் உயிரிழந்தன. அதுமட்டுமில்லாமல் சில வாரங்களுக்கு முன், மான் மோதி ஒரு பெண் உயிரிழந்தார். சோலார் பேனல் அமைப்பது தொடர்பாக வழக்கும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணையில் உள்ளது . வரும் 23ஆம் தேதி வரை அங்கு மரங்கள் வெட்டுவதற்கும் சோலார் பேனல்கள் அமைப்பதற்கும் இடைக்கால தடை உத்தரவையும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கல்லத்தி குளம் கிராம மக்கள், தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை அகற்றி சூரிய மின் நிலையம் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கல்லத்தி குளம் மக்கள் கூறுகையில், ' எங்கள் கிராமம் மலைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் முக்கியமான சூழல் மண்டலமாக உள்ளது. இந்தப் பகுதியில் தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்காக லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி, பாலைவனம் போல் மாற்றிவிட்டனர். இதனால், வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்களின் வாழ்க்கை முறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 51A(g)-ன் கீழ் இயற்கையைப் பாதுகாக்க நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் இயற்கையை அழிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களுக்குத் துணை நிற்கின்றன.

இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் , எங்கள் பகுதியில் வாழ வழியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்களால் இங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அரசு எங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது. இதனால், எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, அரசு வழங்கிய குடும்ப அட்டை மற்றும் ஆதார அட்டைகளை, 'இனி இவை எங்களுக்குத் தேவையில்லை' என்று முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

நான்கு மாதமாக சோலார் பேனல் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் . மாவட்ட ஆட்சியிரிடம் புகாரளித்தும் பலன் இல்லை. எங்கள் முடிவுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவரும் அரசு அதிகாரிகளும் தான் காரணம். எங்கள் போராட்டத்தை அளுநர் முடிவுக்கு கொண்டு வருவார் என்று நம்புகிறோம்.'

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

READ MORE ABOUT :