வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை: திருக்குறுங்குடி மலைநம்பி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் உடனடி தடை!

Flood-warning-Devotees-are-immediately-prohibited-from-visiting-the-Thirukuruungudi-Malainambi-Temple

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை மற்றும் நம்பியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி மலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் மறு உத்தரவு வரும் வரை தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், வானிலை ஆய்வு மையம் தொடர் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, களக்காடு புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) உத்தரவின்பேரில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களக்காடு வனக்கோட்டத்தைச் சேர்ந்த திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற மலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கும், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் இன்று (13.10.2025) முதல் உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது.

நிலைமை சீரடைந்து, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும். எனவே, பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.