கங்கைகொண்டானில் கணவருடன் தகராறு: இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை

mother-commits-suicide-with-two-children-in-gangaikondaan

திருநெல்வேலி அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள பருத்தி குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 27). இந்த தம்பதியருக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (அக் 13)காலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த முத்துலட்சுமி, வாழ்க்கையில் விரக்தியடைந்து விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது இரண்டு மகள்களான முத்தமிழ் மற்றும் சுசிலா ஆகியோரையும் அழைத்துக்கொண்டு வீட்டின் அருகே உள்ள விவசாயக் கிணற்றுக்குச் சென்ற அவர், குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றுக்குள் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

நீண்ட நேரமாகியும் தாய் மற்றும் மகள்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அவர்களைத் தேடியுள்ளனர். அப்போது, கிணற்றின் அருகே முத்துலட்சுமியின் செருப்பு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக , கங்கைகொண்டான் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, முத்துலட்சுமி மற்றும் அவரது இரண்டு மகள்கள் சுசிலா, முத்தமிழ் ஆகியோரின் உடல்களை சடலமாக மீட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட காட்சி, அங்கிருந்த உறவினர்களையும், கிராம மக்களையும் கண்ணீர் விட வைத்தது. அந்தப் பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

பின்னர், கங்கைகொண்டான் காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கணவர் முத்தையா மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறில் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பருத்தி குளம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :