கேரள மாநிலத்தில் அபாயகரமான 'நெக்லேரியா ஃபோவ்லெரி' (Naegleria fowleri) எனப்படும் 'மூளையை உண்ணும் அமீபா' தொற்றின் சமீபத்திய தாக்கம் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று (அக்டோபர் 12, 2025) அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ' கேரளாவில் அமீபிக் என்செபாலிடிஸ் (Amoebic Encephalitis) எனப்படும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 104 ஆக அதிகரித்துள்ளது. இதில், மொத்தம் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் . கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் போன்ற பகுதிகளிலும் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அமீபா தொற்று அசுத்தமான அல்லது தேங்கியுள்ள நீர்நிலைகளில் வசித்து, அதில் குளிப்பவர்களின் மூக்கின் வழியாக மனித உடலுக்குள் நுழைந்து மூளையைத் தாக்கி, 'முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' (Primary Amoebic Meningoencephalitis - PAM) என்ற தீவிரமான நோயை ஏற்படுத்துகிறது. எனினும், இந்தத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. 2023-ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவலுக்குப் பிறகு, மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுபவர்களை கட்டாயமாகக் கண்காணித்து, அதன் காரணங்களைக் கண்டறிய உத்தரவிடப்பட்டது. 2024-ஆம் ஆண்டு முதல் ஆய்விலேயே இந்த அமீபிக் என்செபாலிடிஸ் தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உலகளவில் சுமார் 98% பேர் உயிரிழக்கின்றனர். கேரளாவில் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, துரித சிகிச்சைகள் வழங்கப்பட்டதன் காரணமாக உயிரிழப்பு விகிதம் சுமார் 24 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. நோய்த் தடுப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்க, 2025-ஆம் ஆண்டில் 'ஒரு ஆரோக்கியம்' (One Health) என்ற கூட்டு அணுகுமுறையின் அடிப்படையில் ஒரு விரிவான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அனைத்து நீர்நிலைகளிலும் அறிவியல் ரீதியான குளோரினேஷன் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யப் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.பொதுமக்கள் அசுத்தமான அல்லது தேங்கியுள்ள நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்கவும், குறிப்பாக மூக்கின் வழியாகத் தண்ணீர் நுழைவதைத் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











