நெல்லை மாவட்டத்தில் 32% குற்றசெயல்கள் குறைந்தது : குண்டர் சட்டத்தில் 130 பேர் அடைப்பு - எஸ்.பி.

crime-rate-down-32-in-nellai-district-130-people-jailed-under-goondas-act-says-district-sp

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீவிரமான நடவடிக்கைகளின் விளைவாக, கொலை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 32% குறைந்துள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, அவர் கூறியதாவது,

* தடுக்கப்பட்ட 36 கொலைகள்*

"பழைய கொலை வழக்குகளின் பின்னணியை ஆராய்ந்து, அதில் தொடர்புடைய நபர்களைத் தொடர்ந்து கண்காணித்ததன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 கொலைச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக 112 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2009 முதல் நிலுவையில் இருந்த 22 கொலை வழக்குகளில் இந்த ஆண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளோம். இதில் ஒருவருக்கு மரண தண்டனையும், 72 பேருக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது.

*போதைப் பொருள் வேட்டை மற்றும் பெண்கள் பாதுகாப்பு*

இந்த ஆண்டு மட்டும் கஞ்சா தொடர்பாக 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 258 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த 180 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் 21 வழக்குகளில் 22 குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது; இதில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

*குண்டர் சட்டம் மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு*

சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 130 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பதிவிடுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மீதான தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

*சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் பங்களிப்பு*

கிராமங்களில் சாதிய மோதல்களைத் தவிர்க்க, "இதுவரை 313 கிராமங்களில் 2,115 இடங்களில் சாதிய அடையாளங்களைப் பறைசாற்றும் சின்னங்கள் மற்றும் வண்ணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பங்களிப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் 7,432 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலர் நியமிக்கப்பட்டு, காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு மேம்படுத்தப்பட்டுள்ளது. தொலைந்து போன ₹61 லட்சம் மதிப்புள்ள 304 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

READ MORE ABOUT :