திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் 2022-ம் ஆண்டு மே மாதம் நடந்த கோரமான கல்குவாரி விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மூடப்பட்ட, அந்த குவாரியின் ஒப்பந்ததார் தற்போது அதே பகுதியில் மற்றொரு புதிய குவாரி அமைக்க விண்ணப்பித்துள்ளார்.
*அதிர்ச்சியை ஏற்படுத்திய 2022 விபத்து*
அடைமிதிப்பான்குளத்தில் சங்கரநாராயணன் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரியில், 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி இரவு, சுமார் 400 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராட்சத பாறை சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல நாட்கள் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் நாட்டார்குளத்தைச் சேர்ந்த விஜய் ஆகியோர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம், காக்கைகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார், தச்சநல்லூர் ஊருடையான்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய 4 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பாக, குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் மற்றும் ஒப்பந்ததாரர்களான செல்வராஜ், குமார் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து, சிலரைக் கைது செய்தது. விபத்தைத் தொடர்ந்து குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

*புதிய குவாரிக்கு விண்ணப்பம்*
விபத்து நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், விபத்துக்குள்ளான குவாரியின் ஒப்பந்ததாரர்களில் ஒருவரான திசையன்விளையைச் சேர்ந்த ஒருவர், தற்போது அதே தருவை பஞ்சாயத்து பகுதியில், அடைமிதிப்பான்குளத்திற்கு அருகேயே புதியதாக சாதாரண கல், ஜல்லி மற்றும் கிராவல் குவாரி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.
அவர் தனது விண்ணப்பத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ன் படி, பொது விசாரணைக்காக இந்த வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள புதிய குவாரியானது, தருவை கிராமத்தில் 4.45.20 ஹெக்டேர் பரப்பளவில் அமைய உள்ளது. ஐந்தாண்டு காலத்திற்குள் 8,16,165 கன மீட்டர் சாதாரணக் கல், 35,342 கன மீட்டர் சிதைவடைந்த பாறை மற்றும் 73,582 கன மீட்டர் கிராவல் ஆகியவற்றை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளை (அக்.14) புதிதாக விண்ணப்பித்திருக்கும் குவாரிக்கு மக்கள் கருத்தறியும் கூட்டம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த குவாரிக்கு செங்குளம் அலகு மகாலில் வைத்து மக்களிடம் இருந்து கருத்து கேட்கப்படுகிறது.

அச்சத்தில் அடைப்பான்குளம் மக்கள்
விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே, அந்த விபத்துடன் தொடர்புடைய நபரே மீண்டும் குவாரி அமைக்க விண்ணப்பித்திருப்பது, அப்பகுதி மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.











