கணேஷ் 701, புகையிலை விற்பனை : நெல்லையில் சிக்கிய கடை உரிமையாளர்கள்

tobacco-sales-shops-license-cancel

திருநெல்வேலியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலப்பாளையம் உழவர் சந்தை சாலையில் உள்ள பாரதியார்புரம் பகுதியில் செல்வதமாதா ஸ்டோர் என்ற பெட்டிக் கடையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த கடையில் இருந்து 3 "கணேஷ் 701" புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடை FSSAI பதிவுச் சான்றிதழை (எண்: 22421586000369) பெற்று இயங்கி வந்தது. தடையை மீறி புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததால், கடையின் பதிவுச் சான்றிதழ் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டது. மேலும், உடனடியாக விற்பனையை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டதுடன், சட்டப்பூர்வ நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரூ. 25,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அனைத்தும் கடை உரிமையாளர் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

சந்திப்பு பகுதியில் பீடா கடைக்கு சீல்*

அடுத்ததாக, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள டி.எம். பில்டிங் மாடியில் இயங்கி வந்த முகமது அலி மகாராஜா பீடா கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, 100 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவை உடனடியாக அழிக்கப்பட்டன.விதிகளை மீறியதால், அந்தக் கடை உடனடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. முதல் முறை குற்றத்தில் ஈடுபட்டதால், உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

READ MORE ABOUT :