தனியார் சூரிய மின்திட்டத்துக்கு எதிர்ப்பு: ரேசன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆளுநருக்கு அனுப்பிய கள்ளத்திகுளம் மக்கள்

opposition-to-private-solar-power-project-people-of-kallathikulam-send-documents-including-ration-cards-to-the-governor

தனியார் சூரிய மின் திட்டத்தை கண்டித்து சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவர்களை ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மாறாந்தை அருகே உள்ள, கள்ளத்திகுளம் கிராமத்தில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 350 ஏக்கரில் தென்னை, வாழை, மா, கொய்யா, பலா உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அழித்து வன உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, அந்த பகுதியில் மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதன் காரணமாக, கடந்த சில தினங்களாக ஊருக்குள் மான்கள் புகுந்துள்ளன. இவற்றில் , 5 மான்கள் அங்குள்ள கிணற்றில் விழுந்து பலியாகின.

எனவே, கிராம மக்கள் இங்கு சூரிய மின்சக்தி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. மக்கள் வசிக்கும் பகுதியை தவிர வறண்ட நிலங்களில் சூரிய மின்சக்தி போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தங்களின் கோரிக்கை நிறைவேறாதால், கள்ளத்திகுளத்தை சேர்ந்த நம்பிராஜன், மாரியப்பன், பெருமாள் உள்ளிட்ட பொதுமக்கள் திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து குடியரசு தலைவர், தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி ஆகியோருக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவு தபால் மூலம் ரேஷன் கார்டு ஆதார் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தனர்.