"ஆரம்பக் கட்டப் பரிசோதனையே ஆயுளை நீட்டிக்கும்" என்ற முழக்கத்துடன், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் பேரணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.
பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் இருப்பது உலகளாவிய கவலையாக உள்ளது. ஆனால், ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால், உரிய சிகிச்சைகள் மூலம் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தி விட முடியும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம், குறிப்பாகப் பெண்களிடம் கொண்டு சேர்ப்பதே நெல்லை அரசு மருத்துவமனை மார்பக புற்று நோய்துறை சார்பில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை, மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் ரேவதி பாலன் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்தப் பேரணியில் மார்பக புற்று நோய் அறிகுறிகள் தென்பட்டால் தயக்கமின்றி மருத்துவரை அணுகுதல், மற்றும் முறையான மருத்துவப் பரிசோதனைகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் மணிகண்டன், முதுகலை மருத்துவ மாணவர்கள், மற்றும் செவிலியர்கள் திரளாகப் பங்கேற்றனர். செவிலியர் ஆசிரியர் செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.









