பாளையங்கோட்டை பழைய மார்க்கெட்டில் பள்ளம் தோண்டிய வியாபாரி: இப்படியும் ஒரு பொறாமையா?

the-trader-dug-a-hole-in-the-palayankottai-old-market

தீபாவளி நெருங்கும் நிலையில், பாளையங்கோட்டை பழைய மார்க்கெட் நுழைவாயிலில் பொக்லைன் இயந்திரம் கொண்டு திடீரென பள்ளம் தோண்டப்பட்டதால் வியாபாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டடது.

பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய மார்க்கெட் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. புதிய வணிக வளாகத்திற்கு இன்னும் அனைத்து வியாபாரிகளும் இடம் மாறவில்லை. சிலர் பழைய இடத்திலேயே வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பழைய மார்க்கெட்டில்தான் மக்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில், வியாபாரிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றவே மாநகராட்சி நிர்வாகம் பள்ளம் தோண்டியதாக வியாபாரிகள் சங்கம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. தீபாவளி பண்டிகை காலத்தில் மாநகராட்சியின் இந்த செயல்பாடு கண்டிக்கத்தக்கது என வியாபாரிகள் கொந்தளித்தனர். இதனால், அதிகாரிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

*விசாரணையில் வெளிவந்த உண்மை:*

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சி அதிகாரிகள் எந்தப் பள்ளமும் தோண்டவில்லை. புதிய மார்க்கெட்டிற்கு ஏற்கனவே மாறிச் சென்ற வியாபாரி ஒருவர், மற்ற வியாபாரிகள் கூட்டம் மிகுந்த பழைய மார்க்கெட்டிலேயே வியாபாரம் செய்கிறார்களே...! என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்," என்று விளக்கமளித்தனர்.

வியாபாரிகள் சங்கப் பிரதிநிதி ஒருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், "இது மாநகராட்சியின் செயல் அல்ல. ஒரு தனிப்பட்ட வியாபாரி செய்த செயலால் ஏற்பட்ட குழப்பம் இது. சங்கத்தின் சார்பில் பேசி, தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி, சரிசெய்துள்ளோம். வியாபாரிகள் படிப்படியாகப் புதிய இடத்திற்கு மாறும் பணி சுமூகமாகத் தொடரும். பெரும்பாலானோர் தீபாவளிக்கு முன்பாகவே புதிய கடைக்கு மாறிவிடுவார்கள்," என்றார்.

பள்ளம் தோண்டிய வியாபாரி யார்? என்று கண்டுபிடித்து அவருக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டுமென்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE ABOUT :