நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது .இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை நெல்லை மாநகரப் பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது . மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது.
இன்று காலை இருந்து மாலை வரை சற்று மழை ஓய்ந்து இருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது . இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . வீதிகளில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு முழங்கால் அளவிற்கு மழை நீர் ஓடியதால் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் இருசக்கர வாகனங்களும் வடக்கு ரதவீதி பகுதியில் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வியாபாரிகளும் சிரமப்பட்டனர். 
நகரில் வெள்ளம் ஏற்பட்டு விடும் என்ற பயம் காரணமாக ஜங்ஷன் மேம்பாலத்தை ஒட்டியுள்ள ரயில்வே பீடர் ரோட்டில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஏற்கனவே, கழிவுநீருக்காக பள்ளம் தோண்டி பல மாத காலமாக அந்த பள்ளத்தின் மேல் தார் சாலை போடவில்லை. இதனால், சகதி காடாக காணப்படும் இந்த சாலை, இப்போது மேலும், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பெய்த கன மழையின் போது, கூட இந்த பகுதியில் வெள்ளம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.











