திருநெல்வேலி டவுண் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, சுந்தரர்தெருவில் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமையான இருமாடி வீடு ஒன்று இன்று காலை 7 மணியளவில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
திருநெல்வேலி டவுண் பாரதியார் தெரு மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சுந்தரர்தெருவில், மறைந்த விவசாயத்துறை கண்காணிப்பாளர் களக்காடு ராமசாமியாபிள்ளையின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது மகன்கள் சிவா மற்றும் பரமேஸ்வரன் ஆகிய இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இன்று காலை 7 மணியளவில் மழை , வீட்டின் முதல் தளம் திடீரென இடிந்து பயங்கரச் சத்தத்துடன் கீழே விழுந்தது. "சத்தம் கேட்டதும் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருந்தது," என அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். முதல் தளத்தின் மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில், செங்கற்கள், மரத்தூண்கள், வீட்டில் இருந்த பொருட்கள் என அனைத்தும் சிதறிக் கிடந்தன. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கால்நடைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவருமான சிவசுப்பிரமணியன் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சுகுமாரை கைப்பேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிந்து விழுந்த வீட்டைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












