திருநெல்வேலி மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்: மேயர் மற்றும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

tirunelveli-corporation-contract-cleaning-staff-protest-against-meyor

திருநெல்வேலி மாநகராட்சியில் ராமன்கோ (Ramanco) என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம், ஈ.எஸ்.ஐ பி.எஃப் மற்றும் தீபாவளி போனஸ் உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் குறித்து தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் பேசியதாவது:*

"நாங்கள் ராமன்கோ நிறுவனத்தின் கீழ் சுமார் மூன்று வருடங்களாகப் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் கிடைப்பதில்லை. வழங்க வேண்டிய ஊதியம், போனஸ், நிலுவைத் தொகை (அரியர்) என எதுவும் தரப்படவில்லை. அதிகபட்சமாக அறிவிக்கப்பட்ட ஊதியம்கூட எங்களுக்குக் கிடைப்பதில்லை.

இதுகுறித்து மேயர் ஐயாவிடம் இரண்டு முறை பேசினோம். அவரும், ஆணையரிடம் பேசி இரண்டு நாட்களுக்குள் தீபாவளி போனஸ் குறித்த தகவல் தருவதாகக் கூறினார். குறிப்பாக, ஈ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பற்றியும் கேட்டோம். அவற்றுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து, நல்ல பதில் சொல்வதாகக் கூறி எங்களை அனுப்பி வைத்தனர். ஆனால், இன்றுவரை எந்தவொரு நல்ல தகவலும் எங்களுக்கு வரவில்லை.

இதைக் கேட்டுதான் இன்று முறையிட வந்திருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை மாநகராட்சி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். மாநகராட்சி, 'கம்பெனிக்காரர்களிடம் கேளுங்கள்' என்கிறது. கம்பெனிக்காரர்கள், 'மாநகராட்சியில் ஒப்படைத்துவிட்டோம்' என்கிறார்கள். இப்படி மாறி மாறி காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தூய்மைப் பணியாளர்களுக்கு உண்டான பதிலை இன்னும் சொல்லவில்லை.

எங்களுக்கு ஒரு நல்ல முடிவாக அது வர வேண்டும். அது வரும்வரை எவ்வளவு நாள் ஆனாலும் சரி, எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை நாங்கள் வேலைநிறுத்தம் செய்வோம். கடந்த வருடமும் இதேபோலக் கேட்டதற்கு எங்களுக்கு சரியான முறையில் பதில் சொல்லவில்லை, போனசும் கொடுக்கவில்லை. இந்த வருடம் எங்கள் வாழ்வாதாரத்துக்குத் தேவையான, உழைப்புக்கு உண்டான ஊதியத்தைக் கேட்டு வந்திருக்கிறோம். இனியும் சரியான முறையில் பதில் சொல்லவும், நடவடிக்கை எடுக்கவும் மறுத்தால், எங்கள் போராட்டம் தொடரும், வேலைநிறுத்தமும் செய்யப்படும்." என்றார்.


மாநகர உறுப்பினர் சங்கீதாவின் கணவர் ராதாசங்கர் பேசுகையில்

'எனது மனைவி சங்கீதா 41-வது வார்டு மாநகர உறுப்பினர்.கடந்த ஆண்டு முதல் தூய்மைப் பணி மேற்கொள்வதற்கு ராமன்கோ என்ற தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்தது. அன்றிலிருந்தே பிரச்சனை ஆரம்பமாகி, விட்டது. இந்த 887 தூய்மைப் பணியாளர்களுக்கும், நாள் சம்பளத்தில் ஈ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பிடித்தம் செய்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில் அதைச் செலுத்தவில்லை. அதனால், ஒவ்வொருவருக்கும் உடல்நலக்குறைவு வரும்போது, தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் கடன் வாங்கி, கந்துவட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்தவிதமான வாகனங்களும் சரியாகப் பராமரிக்கப்படுவது இல்லை. தள்ளுவண்டியாக இருக்கட்டும், பேட்டரி வண்டியாக இருக்கட்டும், எல்லாவற்றையும் இவர்களின் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பழுது பார்க்கிறார்கள். ஈ.எஸ்.ஐ, பி.எஃப் பணத்தைப் பிடித்துக் கட்டாமல் இருப்பது ஒரு மோசடி, ஒரு சீட்டிங், அது ஒரு கடுமையான குற்றம் . அதற்காக, கடந்த மாமன்றக் கூட்டத்தில் எல்லா கவுன்சிலர்களும் பேசி இருக்கிறோம். செய்திகள் வெளி வந்த பிறகு, ஈ.எஸ்.ஐ-ஐ மட்டும் சில பேருக்கு கட்டி இருக்கிறார்கள். இன்னும் பலருக்கு ஈ-பெச்சான் கார்டுவரவில்லை.

எங்கள் ஒரே கோரிக்கை என்னவென்றால், உடனடியாக ரூ.520-ல் இருந்து ரூ. 540 ஆக உயர்த்தப்பட்ட ஊதிய வேறுபாடு தொகையை (சுமார் ரூ.3,000-ரூ. 3,200) இந்தத் தீபாவளி நேரத்தில் இந்த மக்களுக்கு போனசாக கொடுத்து, அவர்கள் தீபாவளியைச் சந்தோஷமாகக் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.