திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து நீர் தேங்கி நிற்கும் நிலையில், மேலப்பாளையத்தில் மண் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 75 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
*கனமழை, நீர் தேக்கம்:*
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி குளம் போல் காட்சியளிக்கிறது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாநகராட்சி நிர்வாகம் மழை வடிநீர் கால்வாய்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளை முறையாக தூர்வாராமல் விட்டதாலேயே பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பழைய வீடுகளில் வாழும் மக்கள் பெரும் அச்சத்துடனே நாட்களை கழித்து வருகின்றனர்.
*3 வீடுகள் இடிந்து சேதம்:*
இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக். 16) பெய்த கனமழையின் காரணமாக நெல்லை டவுண் மற்றும் சந்திப்பு சிந்து பூந்துறை பகுதிகளில் இரண்டு வீடுகளின் சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த வீடுகளில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
*மூதாட்டி பலி:*
தொடர்ந்து, நேற்று (அக். 17) இரவும் நெல்லையில் கனமழை நீடித்தது. இந்த கனமழையின் காரணமாக மேலப்பாளையம் குறிச்சி மருதுபாண்டியர் 1-வது தெருவில் வசித்து வந்த தளவாய் மகன் முத்தையா (55) என்பவரது வீட்டின் மண் சுவர், திடீரென அதிகாலையில் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில், வீட்டில் இருந்த முத்தையாவின் தாயாரான மாடத்தியம்மாள் (75) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார்.
*சிகிச்சை பலனின்றி மரணம்:*
அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாடத்தியம்மாளை மீட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவிலேயே மாடத்தியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார், மாடத்தியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










