தலையாரி முதல் ஆட்சியர் வரை சாதி பார்க்கின்றனர் - புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

caste-discrimination-among-officials-doctor-krishnasamy-says-in-nellai

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசு நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

*மாநில மாநாடு மற்றும் கள ஆய்வு*

புதிய தமிழகம் கட்சியின் 7 மாநில மாநாடு 2026 ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. அதையொட்டி கடந்த ஆறு மாதங்களாக, குறிப்பாகத் தென் தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். கடந்த நான்கு நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, பாப்பாக்குடி ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களைச் சந்தித்தேன். குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர் மற்றும் இதர சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதை நேரில் கண்டேன்.

* குடிநீர் பிரச்சனை: பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் வசதி இல்லை. 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோதான் தண்ணீர் வருவதாகவும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டாலும், அதில் காற்றுதான் வருகிறதே தவிர தண்ணீர் வருவதில்லை. தாமிரபரணி ஆற்றங்கரைக் கிராமங்களான திருவேங்கடநாதபுரம் போன்ற பகுதிகளில் கூட, ஆற்று நீரைச் சுத்திகரிக்காமல் விநியோகிக்கின்றனர்.

* சுகாதாரம் மற்றும் சாலைகள்:பெண்களுக்குக் கழிப்பறை வசதிகள் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. மேலும், மற்ற தெருக்களில் சிமெண்ட் சாலைகள் அல்லது பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விளிம்பு நிலை மக்கள் வாழும் தெருக்கள் மட்டும் திட்டமிட்டே மண் சாலைகளாக விடப்பட்டுள்ளன.

* மயான வசதி: பல கிராமங்களில் முறையான மயான வசதி இல்லை. ஆண்டாள்புரம் காலனி போன்ற பகுதிகளில் மக்கள் 4 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டிய அவலம் இருக்கிறது.


* வீட்டு மனைப் பட்டா: பெரும்பான்மையான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா இல்லை என்பதால், அரசின் எந்த நலத்திட்டங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. கோயில் நிலங்கள் அல்லது தனியார் அறக்கட்டளை நிலங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்க மறுக்கிறார்கள்.

* திட்டமிட்ட புறக்கணிப்பு:ஊராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் ஆகியோர் நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் சாதிய பாகுபாடு காட்டுகின்றனர். இந்தப் பகுதிகளைத் திட்டமிட்டே புறக்கணிக்கின்றனர். உள்ளாட்சித் தலைவர்கள் சாதிய மனப்பான்மையுடனும், ஆளும் கட்சி என்ற அதிகாரத்துடனும் செயல்படுகின்றனர்.

* அதிகாரத்தில் பாகுபாடு: அரசு நிர்வாகத்தில், கீழே தலையாரியில் இருந்து மேலே கலெக்டர் வரை இந்த சாதியப் பாகுபாடு பார்க்கின்றனர். இது மாற வேண்டும். மாவட்ட ஆட்சியர் வெறுமனே மனுக்களை வாங்கி வைப்பது சடங்காக மாறிவிட்டது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.