அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள அயன்சிகட்டி எம்.ஜி.ஆர். திடலில் நேற்று மாலை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, திமுக மற்றும் முதல்வரை கடுமையாக தாக்கி பேசினார். அவர், பேசியதாவது,
“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் என்று தெரியுமா? *இந்தத் தி.மு.க. இனி ஆட்சிக்கு வரவே கூடாது* என்பதற்காகவே நமது கழகத்தை எம்.ஜி. ஆர் தொடங்கினார். புரட்சித் தலைவர் கொடுத்ததற்கே சொந்தக்காரர். அவர் இருக்கும் வரை இந்தத் தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடிந்ததா? இல்லை. பின்னால் வந்த ஜெயலலிதாவும் திமுகவுக்கு சிம்மசொப்பனமாகஇருந்தார்.

தற்போது ஆட்சியிலுள்ள ஸ்டாலின் மக்களுக்கு 'விடியல்' தந்தாரா? இல்லை. 2021 தேர்தலின்போது 221 வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். அவற்றில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள்? ஒரேயொரு வாக்குறுதியைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதையும் நாங்கள் (அ.தி.மு.க.) சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து அழுத்தம் கொடுத்த காரணத்தாலேயே, மூன்றாண்டு காலம் தாமதமாக, அந்த *ஆயிரம் ரூபாய்* கொடுத்திருக்கிறார்கள். ஒரு சிலருக்கு 36 மாதங்களாக அந்த 1000 ரூபாயும் கொடுக்கவில்லை.
கடந்த மூன்று வருடமாக ஒரு சிலருக்கு அந்த ஆயிரம் ரூபாய் வரவில்லை. எனவே, வருகினற 2026 தேர்தலுக்காக , தி.மு.க.காரர்கள் ஓட்டுக் கேட்க வரும்போது, "ஐயா, நீ மூன்று வருடமாக எனக்கு காசு தரவில்லை. *ரூ.36,000 எனக்கு கடன் வைத்திருக்கிறாய்.* அந்தக் கடனைத் தந்துவிட்டு நீ பேசு; நான் உனக்கு ஓட்டுப் போடுகிறேன்” என்று சொல்லலாமா? சொல்லக்கூடாதா? என் அன்புச் சகோதர, சகோதரிகள் இதனை கட்டாயம் கேட்க வேண்டும்.
இந்த ஆட்சியில் சமூகச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. காரணம், மதுபோதை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுதான். சிறுவர்கள் கூட இன்றைக்குப் போதையில் அலைகிறார்கள். *இந்த ஆட்சி மீண்டும் வரணுமா? வேண்டாம்.

என் தொகுதியின் மக்கள் புத்திசாலியானவர்கள். எனவே, நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களும் உங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரியும், என் அக்காவுக்கும் தங்கைக்கும் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியும்.
இசக்கி சுப்பையா பணம் கொடுக்கிறான், மக்களை ஏமாற்றுகிறான் என்று சொல்கிறார்கள். நான் உழைத்த காசைத்தான் போடுகிறேன். இதற்காக, இங்குள்ள சங்கிலி பூதத்தார் சன்னிதியில், *நான் காசு வாங்க மாட்டேன்; இனிமேலும் வாங்க மாட்டேன்* என்று சத்தியம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னைக் குறை சொல்பவர்கள் அப்படி செய்வார்களா?
எனவே, மக்கள் யாரும் திமுகவுக்கு மீண்டும் வாக்களிக்கக் கூடாது. நமது இரட்டை இலைக்குதான் வாக்களிக்க வேண்டும். நான் உங்களிடம் எதற்காக வந்திருக்கிறேன்? இரட்டை இலைக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்."
இவ்வாறு அவர் பேசினார்.









