மகளுக்கு பிரமாண்ட திருமணம் : சமையல்காரர் பணத்தை கேட்டால் பாளை.திமுக பிரமுகர் மிரட்டல்?

grand-wedding-for-daughter-food-contractor-threatened-by-dmk-leader

திருநெல்வேலி மத்திய மாவட்ட பாளையங்கோட்டைப் பகுதி தி.மு.க. செயலாளரான ஆண்டன் செல்லத்துரை, தனது மகள் திருமணத்திற்காகச் சமையல் செய்த ஒப்பந்ததாரருக்குத் தர வேண்டிய ரூ.9,46,000 பாக்கித் தொகையை வழங்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட சமையல் ஒப்பந்ததாரர் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் திருநெல்வேலி மாநகரக் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் அந்தோணி ராஜ் (வயது 55) என்பவர், தி.மு.க. பிரமுகர் ஆண்டன் செல்லத்துரையின் மகள் திருமணத்திற்காகச் சமையல் பணிகளை செய்துள்ளார். இந்தத் திருமணம் கடந்த ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

இது தொடர்பாக புகார் மனுவில் கூறியிருப்பதாவது, சமையலுக்காக ஆண்டன் செல்லத்துரை முதலில் 4000 பேருக்கு உணவு, 1000 கிலோ சிக்கன் பிரியாணி உள்ளிட்ட ஏற்பாடுகளைக் கேட்டதாகவும், தான் மறுத்தும் ஆண்டன் செல்லத்துரையின் நிர்பந்தத்தால் சமையல் செய்து கொடுத்ததாகவும் அந்தோணி ராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். திருமணச் சமையலுக்கான மொத்தச் செலவு ரூ.13 லட்சத்து 96 ஆயிரம் ஆனதாக அந்தோணி ராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.இதில், சமையல் ஒப்பந்ததாரருக்கு ஆண்டன் செல்லத்துரை தரப்பில் ஆரம்பத்தில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே முன்பணமாக (அட்வான்ஸாக) வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ரூ.9 லட்சத்து 46 ஆயிரம் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களில் மீதிப் பணத்தைத் தருவதாக ஆண்டன் செல்லத்துரை உறுதியளித்ததாகவும், ஆனால் இரண்டு மாதங்கள் கடந்தும் பாக்கித் தொகையை வழங்காமல் இழுத்தடித்ததாகவும் அந்தோணி ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 17ம் தேதி அந்தோணி ராஜ் நேரில் சென்று பணம் கேட்டபோது, ஆண்டன் செல்லத்துரை, அவரது மகன்கள் ஆல்வின் மற்றும் அஜீத் பிரவின் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி, "*பணம் கேட்டால் நீ உயிரோடு இருக்க மாட்டாய்*" என்று மிரட்டினர்.

தொடர்ந்து, 20ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஆல்வின் மற்றும் அஜீத் பிரவின் ஆகியோர் அந்தோணி ராஜ் வீட்டிற்கு வந்து, மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பட்டாசுகளை கொளுத்தி வீட்டுக்குள் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.* இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது . பாக்கி பணத்தை வழங்காததால், சமையல் பணியில் ஈடுபட்ட 40 சமையல் கலைஞர்கள் மற்றும் உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்ட 60 பேர் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முழுமையாக ஊதியத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாத்திர வாடகை, பால் செலவு உள்ளிட்ட எதையும் தன்னால் ஈடுகட்ட முடியவில்லை .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையே, நிர்ணயித்த அளவைவிட சமையல் அதிக அளவில் செய்யப்பட்டதாலும், உணவு அதிக அளவில் வீணானதாலும், ஒப்பந்ததாரர் கேட்ட முழுத் தொகையையும் வழங்கவில்லை என ஆண்டன் செல்லத்துரையின் மனைவி ஜெயமேரி தரப்பிலிருந்து காவல் துறையில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சமையல்காரர் அந்தோணி ராஜ் பணம் கேட்டு மிரட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :