திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, இன்று (24.10.2025) நம்பியாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக அணைப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று பிற்பகல் 12.00 மணியளவில் அணையின் நீர்மட்டம் 50.50 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
*பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகள்:*
வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், நம்பியாற்றின் கரையோரம் அமைந்துள்ள திருநெல்வேலி, திருக்குறுங்குடி , வீரவநல்லூர், பாபநாசம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, நம்பியாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ அல்லது வேறு எந்தச் செயல்களிலும் ஈடுபடவோ கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, அரசு விதிகளின்படி நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ள அபாய எச்சரிக்கை தகவல், மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர், பொதுப்பணித் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், தாசில்தார்களுக்கும் தகவல் மற்றும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.










